அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி வைரஸ் பாதிப்பில் இருந்து 90% பாதுகாப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 5.09 கோடி பேர் பாதிக்கப்பட்டு 12,65,117 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி, முதல் 2 கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததையடுத்து, ஜூலை 27 ஆம் தேதி இறுதி 3 ஆம் கட்ட பரிசோதனைகள் தொடங்கியது.

இந்த தடுப்பூசி அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் துருக்கி உள்ளிட்ட ஆறு நாடுகளில் 43,500 பேருக்குச் செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் நேற்றுவரை மொத்தம் 38,955 பேருக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவில், ஃபிப்சர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மிகப்பெரிய பக்கவிளைவுகள் ஏற்படாமல் மனிதர்களை பாதுகாக்கிறது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனங்கள் ஒப்புதல் கோரி இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க உள்ளன.

இது தொடர்பாக ஃபிப்சர் நிறுவனத்தின் தலைவர் ஆல்பர்ட் பவுர்லா கூறுகையில், “மனித குலத்திற்கும் அறிவியலுக்கும் இன்று மிகச்சிறந்த நாள். 3-ம் கட்ட பரிசோதனையின் முதல் முடிவுகள் எங்கள் தடுப்பூசி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கிறது என்பற்கான முதல்கட்ட ஆதாரங்கள் உள்ளது என்பதை உறுதி செய்கிறது” என்றார்.

இந்த வருட இறுதிக்குள் இந்த மருந்து 5 கோடி டோஸ்கள் மற்றும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 1300 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படும் என நிறுவனம் கூறி உள்ளது.

ரஷியாவின் கொரோனா தடுப்பூசி; இந்தியாவில் 100 பேர் மீது செலுத்தி பரிசோதனை