கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி வந்து மருந்துகள் வழங்கப்படும் என தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே 10 முதல் மே 24 வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊடரங்கை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசுக்கு உதவிடும் வகையில் வீடு தேடி வந்து மருந்துகளை வழங்க தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதனால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் வீடு தேடி வந்து மருந்து வழங்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா உட்பட எந்த மருந்து மற்றும் மருத்துவத் தேவையாக இருந்தாலும் 9342066888 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம், தங்களுடைய பெயர், மருந்து, வீட்டு முகவரி உள்ளிட்ட தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

என்ன மருந்து தேவை என்பதை தெரிவித்துவிட்டால், இரண்டு மணி நேரத்தில் மருந்து வீடு தேடி வரும். மேலும், கோவிட் சம்பந்தமான மருந்துகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50% தள்ளுபடி விலையில் வழங்கப்படும். மற்ற வயதினர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிக்கப்படும். இதில் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் ஆலோசனை தேவைப்படுவோருக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் செல்போனில் இலவச ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தில் பல அனுபவம் பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். அரசின் ஒத்துழைப்புடன் ஊரடங்கு காலத்திலும் சேவை தொடரும். மக்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டு கொரோனாவுக்கு எதிராக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆக்சிஜன் ஒதுக்கீட்டை சீர் செய்ய 12 பேர் கொண்ட உயர்மட்ட குழு: உச்சநீதிமன்றம்