அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாசாவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX), மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக தனது முதல் விண்கலத்தை ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்தது. விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்கலத்திற்கு ‘க்ரூ டிராகன்’ என பெயரிடப்பட்டது.
எலோன்மஸ்க் தலைமையிலான இந்நிறுவனம் நாசாவுடன் இணைந்து இதற்கான பணிகளை மேற்கொண்டது. க்ரூ டிராகன் விண்கலத்தில் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்ததால் அதில் பயணிக்கும் விஞ்ஞானிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சென்று வர திட்டமிடப்பட்டது.
இதையடுத்து நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக்கொண்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ராக்கெட் சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் விண்ணுக்கு மனிதர்களை பத்திரமாக அனுப்பி திரும்பி கொண்டு வர முடியும் என்ற சோதனை ஓட்டத்தில் வெற்றி காணப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன் க்ரூ-1 கப்ஸியூல்‘ (DragonCrew-1 capsule) விண்கலம் மூலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு மைக்கேல் ஹாப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும், சோய்சிநொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர்.
Yesterday, NASA's @SpaceX Crew-1 lifted off with four astronauts aboard. As the Crew Dragon "Resilience" makes its way to @Space_Station for docking tonight at 11pm ET (4am UTC), revisit the start of this #LaunchAmerica mission with @NASAHQPhoto images: https://t.co/qfG482rscz pic.twitter.com/9Y4dVizbvH
— NASA (@NASA) November 16, 2020
ரெசிலியன்ஸ் எனப்படும் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய நேரப்படி நவம்பர் 17 அதிகாலை 4 மணிக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்லும்.
விண்வெளி வீரர்கள் மற்றும் க்ரூ டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ராக்கெட் இந்திய நேரப்படி நவம்பர் 16 நள்ளிரவு 12.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளி வீரர்கள் 6 மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணிகளை மேற்கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.