இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்.

புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01 செயற்கைகோள் மற்றும் 9 வணிக ரீதியிலான செயற்கை கோள்கள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் இன்று மாலை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி இன்று மாலை 3.02 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுவதற்கான கவுன்டவுன் நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. அதன் பின்னர் திட, திரவ எரிபொருள் நிரப்புதல்உள்ளிட்ட பணிகளை விஞ்ஞானிகள் குழு தொடங்கியது.

இந்நிலையில், இன்று காலை முதலே அவ்வப்போது இடி மழை பெய்து வந்தால், ஏவுகனை விண்ணில் செலுத்தப்படுவது 10 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்ட செயற்கை கோள் மாலை 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் 44.5 மீட்டர் உயரம் கொண்டது. இது பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 51 வது ராக்கெட் ஆகும்.

விண்ணுக்கு சென்றுள்ள இஓஎஸ்-01 செயற்கைகோள் விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படும் என்றும், இதிலுள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதனுடன் இணைந்து லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான 1 செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4, அமெரிக்காவிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்கள் என 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் ஏவப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் ராக்கெட் ஏவுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நவம்பர் 7ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-49- இஸ்ரோ அறிவிப்பு