கரோனா வைரஸ் இரண்டு வழிகளில் பரவும் என்றே கூறப்பட்டு வந்த நிலையில், மூன்றவதாக ஒரு வழியிலும் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் தற்போது வரை வேகமாக பரவி, பெரும் பாதிப்பை உண்டாக்கி உள்ளது. 10 லட்சத்திற்க்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 53100 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகள் கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதுவரை கரோனா வைரஸ் பாதித்த மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்கள், அவர்கள் தங்கி இருக்கும் இடம் அல்லது அவர்களின் தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் துளிகள் மூலம் தான் வைரஸ் தொற்று அதிகமாக பரவுவதாக கருதப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜப்பான் விஞ்ஞானிகள் நுண் துளிகள் மூலம் குறிப்பிட்ட அளவு தூரத்தில் உள்ளவர்களுக்கும் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம், பேசிக் கொண்டு இருக்கும் போதும், அருகே இருக்கும் போதும், தும்மல், இருமல் இல்லாமலேயே, நுண் துளிகள் மூலம் இந்த வைரஸ் மனிதர்கள் இடையே பரவக் கூடும்.

இது தும்மல், இருமல் மூலம் வெளியாகும் துளிகள் மூலம் கரோனா வைரஸ் பரவுவதை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. மேலும், இந்த நுண் துளிகள் மூலம் தான் கொரோனா வைரஸ் வேகமாகவும், அதிக தீவிரத்துடன் பரவி இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

ஏற்கனவே, கரோனா வைரஸ் தும்மல், இருமல் துளிகள் மூலம் பரவுவதை மருத்துவ முகக் கவசம் அல்லது என்95 முகக் கவசம் மூலம் தடுத்து நிறுத்த முடியாது என சில நிபுணர்கள் கூறி வரும் நிலையில், நுண் துளிகள் மூலம் பரவினால் அதை தடுப்பது இன்னும் கடினம் ஆகும்.

இந்த நுண் துளிகள் பற்றி செய்யப்பட்ட ஆய்வுல், ஒரு வகுப்பறையில் ஒரு மனிதர் இருமினால் சில நொடிகளில் ஒரு லட்சம் நுண் துளிகள் வரை பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த நுண் துளிகள் கரோனா வைரஸை கடத்திக் கொண்டு சென்று தொற்று பலருக்கும் பரவ காரணமாக உள்ளது. இதே போலத் தானே நுண் துளிகள் அல்லாத, துளிகள் பரவும் போதும் நடக்கிறது.

ஆனால் அதில் தான் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. தும்மல் மூலம் வெளிவரும் துளிகள் 20 – 30 வினாடிகளில் தரையை அடைந்து விடும். அதனால், காற்று மூலம் கரோனா வைரஸ் பரவும் அபாயம் குறைவு. ஆனால், நுண் துளிகள் காற்றில் நீண்ட நேரம் இருக்கும். அதனால், அந்த இடத்தில் இருக்கும் பலருக்கும் அது பரவ வாய்ப்பும் அதிகம்.

இந்த புதிய ஆய்வுத் தகவல் வழி மூலம் கரோனா வைரஸ் பரவுகிறது என்றால் உலக நாடுகள் ஊரடங்கு விதிகளை மேலும் கடுமையாக்கவும், அதிக நாட்கள் நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. அது பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை உண்டாகும்.

இதுஒருபுறம் இருக்க, American Journal of Respiratory and Critical Care Medicine வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் இனைந்து, கரோனா வைரஸ் அறிகுறிகளிலிருந்து மீண்டவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில் பாதி பேருக்கு குணமடைந்த பிறகும் அதன் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டு ஐந்து அல்லது எட்டு நாட்களுக்குள் குணமாகிவிட்டாலும் அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவலாம். எனவே பாதிக்கப்பட்டவர்கள் வீடு திரும்பினாலும் அல்லது வீட்டிலேயே மருத்துவ சிகிச்சைகள் பெற்றவர்களாக இருந்தாலும் மேலும் 2 வாரங்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.