பிரான்ஸ் நாட்டில் கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 3.30 லட்சம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு ஒன்றை சுயாதீன விசாரணைக்குழு நடத்தியுள்ளது.
Jean Marc Sauve என்பவர் தலைமையில் இந்த ஆய்வுகள் நடைபெற்று 2500 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 1950ஆம் ஆண்டு முதல் சுமார் 3.30 லட்சம் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடந்த 70 ஆண்டுகளில் இந்த கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் 3,000 பேர் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றச் சம்பவத்தில் அதிகமாக மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளதும் அந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதில் 80% ஆண் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றங்கள் தொடர்பாகக் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அதில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள், நீதிமன்றம், தேவாலயம், போலிஸ், பத்திரிகை செய்திகள் போன்ற தரவுகளைச் சேர்த்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 6,500 பேரிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 2,500 பக்க விசாரணை அறிக்கை வெளியாகி பிரான்ஸ் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.