சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.900 என விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிலிண்டருக்கு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.915 ஆக விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருட்களின் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு ஆட்சி அமைத்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி  அமைக்கப்படுகிறது.

அதேபோல் ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு ஒருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கொரோனாவால் மக்கள் வாழ்வாதரம் இழந்துள்ள இந்த சூழலிலும், வீடுகளுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உச்சத்திற்கு செல்கிறது.

சமையல் எரிவாயு விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களும் கடந்த சில மாதங்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தி வருகின்றன.

வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் மட்டுமின்றி, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையும் ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்படுகிறது. கடந்த 1 ஆம் தேதி 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டர் விலை ரூ.43 உயர்த்தப்பட்டு அதன் விலை ரூ.1,876 ஆக உள்ளது.

இந்நிலையில் சமையல் எரிவாயு விலை இந்த மாதமும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 14 கிலோ எடையுள்ள வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை ரூ.15 உயர்த்தப்பட்டு, ரூ.900.50 ஆக இருந்த சிலிண்டர் விலை நேற்று (6.10.2021) ரூ.915.50 ஆக அதிகரித்துள்ளது.

வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலை கடந்த 3 மாதமாக ரூ.25 வீதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரை ரூ.215.50 உயர்த்தப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தையும் ஒன்றிய அரசு நிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விலை உயர்வுக்கான காரணம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு, திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் கூறுகையில், “உலக சந்தையில் அந்த எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றத்தை கொண்டு வரும்போதெல்லாம் இங்கு சிலிண்டர் விலை உயருகிறது.

மேலும் ஒன்றிய அரசு முன்பு மானியம் அதிகளவில் வழங்கி வந்தது. அதனால் அந்த விலை உயர்வு தெரியாமல் இருந்தது. தற்போது அரசு கொள்கை முடிவு எடுத்து மானியத்தை பெருமளவில் குறைத்திருக்கிறது. அது அரசின் முடிவு. அதுபற்றி எந்த கருத்தும் கூற முடியாது” என்று விளக்கம் அளித்துள்ளார்.