செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்த காவல்துறை துணை ஆய்வாளர் கவுதமன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரைச் சேர்ந்தவர் காவலர் கவுதமன். சென்னை மாநகர காவல்துறை பாதுகாப்பு பிரிவில் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றியுள்ளார். கேளம்பாக்கம் மேலக்கோட்டையூரில் உள்ள காவல்துறை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தொடர் பணிச்சுமைக் காரணமாக தனது வேலையை விட்டுவிடுவதாகவும் கவுதமன் கூறியுள்ளார். ஆனால் அவரது வீட்டார் இதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய தினம் வேலைமுடிந்து வீடு திரும்பிய கவுதமன் தனது கைத் தூப்பாக்கியால் தலையில் சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார். இதனிடையே தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கவுதமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்துள்ளது. விசாரணையில், கடந்த அதிமுக ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை மற்றும் வக்பு வாரியத்தில் பலருக்கு வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.6 கோடி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், நிலோபர் கபிலுக்கு பணத்தைக் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தபோது, எனக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் உதவியாளராக இருந்த பிரகாசம் என்பவர் தான் தன் பெயரை பயன்படுத்தி பணம் வசூல் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உதவியாளர் பிரகாசம் டிஜிபியை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், நிலோபர் கபில் கூறியதின் பேரில் தான் சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் வாங்கியதாகவும், பணத்தை வாங்கியதுமே அமைச்சரின் வங்கி கணக்கில் போட்டு விட்டதாகவும்,

மேலும் இந்த விவகாரங்கள் அனைத்தும் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எஸ்.ஐ கவுதமனுக்கு தான் தெரியும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து இந்த புகாரின் பேரில் காவல்துறையினர், கவுதமனை அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கவுதமனுக்கு முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடும் மன உளைச்சலில் இருந்த கவுதமன் தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.