கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்கும் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளது. கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவில் போராட்டங்கள் தொடர்ந்தன. நாட்டின் முக்கிய இடங்களில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கனரக வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்காங்கே லாரிகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதில் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டாவா தூதரக பாலத்தில் போராட்டக்காரர்கள் நெடும் தூரத்திற்கு லாரிகளை நிறுத்தி வைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கனடா மற்றும் அமெரிக்க வர்த்தக தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிக்கையும் விடுத்தனர்.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் பிரதமர் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து இரண்டு வாரங்களாக தூதரக பாலத்தில் நிறுத்தப்பட்ட லாரிகள் அகற்றப்பட்டு, கனடா காவல்துறையால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் கனடா- அமெரிக்கா இடையிலான பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

1970 ஆம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் தற்போது அவசரநிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.