சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கானுக்கு 2 முறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், மும்பை உயர் நீதிமன்றம் இன்று (28.10.2021) ஜாமீன் வழங்கியது.

மும்பையில் சொகுசுக் கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், அர்பாஸ் மெர்சன்ட், முன்முன் தமேச்சா உள்ளிட்ட சிலரை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் உள்ளிட்டோர் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து ஆர்யன் கான் ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன்பின்னர் ஜாமீன் வழங்கக் கோரி ஆர்யன் கான் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோர் சார்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் சார்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜாரானார். அதேபோல் முன்முன் தமேச்சா சார்பில் அலி காஷிப் கான் தேஷ்முக், அர்பாஸ் மெர்ச்சன்ட் சார்பில் அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர்.

கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணையில் வாதாடிய முகுல் ரோஹத்கி, “ஆர்யன் கான் போதை மருந்து உட்கொண்டதாக மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தவில்லை. ஆர்யன் கான் வாட்ஸ் அப் உரையாடல்களை ஆராய்ந்து போது, அது மிகப் பழைய உரையாடல்.

அதற்கும் அக்டோபர் 2 ஆம் தேதி கார்டீலியா கப்பலில் நடந்ததற்கும் சம்பந்தம் இல்லை. ஆர்யன் கான் அந்தக் கப்பலில் செல்ல டிக்கெட் வாங்கவில்லை. அவரை விருந்தினராக அழைத்துள்ளனர். ஆர்யன் கானிடம் இருந்து பெரிய அளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டதாகக் கூறி ரிமாண்ட் விண்ணப்பம் தவறாக வழிநடத்துகிறது.

ரிமாண்ட் விண்ணப்பத்தில் சரியான உண்மைகள் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும்” எனக் கூறினார். மேலும் தனது வாதங்கள் தொடர்பான ஆவணங்களையும் சமர்பித்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

https://www.facebook.com/savenra/posts/7257531010939426