கொரோனா ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள், துயரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு திட்டம் மற்றும் வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர கோரி சமூக செயல்பாட்டாளர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர், ஜெகதீப் சொக்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் மே 13 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ‘ஆத்ம நிர்பார் பாரத்’ அல்லது வேறேதுனும் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும். இம்மாதம் முதல் டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநில அரசுகள் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், உணவு பொருட்கள் வழங்க அடையாள அட்டைகளை கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப விரும்பினால், போக்குவரத்து வசதியை இந்த 3 மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

இதுதொடர்பாக ஒன்றிய அரசு போதிய முன்னெச்சரிக்கை மற்றும் அத்தியாவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு விசாரணையை மே 24 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

‘இந்திய அரசை காணவில்லை’- முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோவால் சர்ச்சை