அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது, ராயபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட வந்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், திமுக தொண்டர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக நரேஷ் அளித்த புகாரில், ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 8 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 21.2.2022 அன்று கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை இன்று (25.2.2022) நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இரண்டாவதாக சிறையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். தேர்தல் நாளான 19 ஆம் தேதி ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மூன்றாவதாக மகேஷ் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்நிலையத்தில் அளித்த புகாரில், தனக்கு சொந்தமான 8 கிரவுண்டில் உள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன் ஆகியோர் மிரட்டி அபகரித்துக் கொண்டுள்ளார் என்றும் இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும் எனவும் தெரித்துள்ளார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன் ஆகியோர் மீது குற்றச்சதி, அத்துமீறி நுழைதல், கொடுங்காயத்தை ஏற்படுத்துதல், கொள்ளையடித்தல், கொலை மிரட்டல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஜெயக்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் காவல்துறையினர் வரும் திங்களன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆஜர்படுத்த உள்ளனர்.