டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி 62 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிர் உட்பட பல காரணங்களால் இப்போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக குடியரசு தின விழாவின்போது டெல்லியில் சுமார் 1 லட்சம் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

[su_image_carousel source=”media: 21881,21882,21883″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

அதன்படி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் தேசியக் கொடி ஏந்தி பிரம்மாண்ட டிராக்டர் பேரணியைத் தொடங்கினர். இதற்கிடையே சிங்கு, திக்ரி எல்லை பகுதிகளில் இருந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முயன்றனர்.

இதனையடுத்து டெல்லி எல்லையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் விவசாயிகளை முன்னேறவிடாமல் தடுப்புகளை அமைத்து தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடையை மீறி உள்ளே நுழைந்ததால் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

விவசாயிகளுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருதரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது.

டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் செங்கோட்டையில் ஏற்றினர். செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ட்ரோன் கேமரா மூலம் செங்கோட்டையை சுற்றிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

[su_image_carousel source=”media: 21886,21884,21885″ crop=”none” captions=”yes” autoplay=”3″ image_size=”full”]

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் நிலையில் டெல்லியின் முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தேசியக் கொடியை ஏந்தி டிராக்டர் பேரணியை தொடங்கிய விவசாயிகள்