மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தவறான மொழிபெயர்ப்புடன் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளுக்கும் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மொழி மாற்றத்தில் தவறு நிகழ்ந்த 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொருவருக்கும் 196 மதிப்பெண் வழங்க வேண்டும்.

இந்த மதிப்பெண் அடிப்படையில் இரு வாரங்களுக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும். அதுவரை தற்போதைய தரவரிசைப் பட்டியலையும், கலந்தாய்வையும் நிறுத்தி வைக்க வேண்டும். புதிய தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு மூலமாக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீட் மூலம் எம்.பி.பி.எஸ் இடத்திற்கு தேர்வாகியுள்ள தமிழக மாணவர் சத்யா என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஜூலை 20-ஆம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் டி.கே. ரங்கராஜன் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லூத்ரா, என்ஜிஆர் பிரசாத் ஆகியோர் ஆஜராகி,மொழிபெயர்ப்பு காரணமாக தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 கேள்விகளால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, இந்தக் கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்றனர்.

அப்போது குறுகிட்ட நீதிபதி எல். நாகேஸ்வர ராவ், நீட் தேர்வு என்பது அகில இந்திய அளவில் நடத்தப்படுவதாகும். வினாத்தாளின் மொழிப்பெயர்ப்பு சரியாக இருந்திருக்கும் பட்சத்திலும், மாணவர்கள் தவறான விடையை அளித்திருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டால் திறமையான மாணவர்கள் நிலை என்னவாகும்?’ என்றார்.

இதற்கு சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்நிலையில், மாநில அரசால் அளிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் செய்த தவறுக்கு சிபிஎஸ்இ மீது குற்றம்சாட்டி வருகின்றனர். நீட் தேர்வை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில், வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் தங்களது மாநில மொழியில் படிப்பது என்பது சரி; ஆனால் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் முக்கியம். +2 மாணவர்கள் அடிப்படை ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் முக்கியம். மருத்துவ படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில்தான் பயிற்றுவிக்கப் படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.

வினாத்தாளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் ஆங்கில மொழியில் கேட்கப்பட்ட வினாக்களையே இறுதியாகக் கொள்ள வேண்டும். 196 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டால் சில மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களையும் விஞ்சும் நிலை ஏற்படும். மேலும், மாணவர்கள் மத்தியில் பாகுபாடு உருவாகவும் வழிவகுக்கும். குழப்பமான நிலை உருவாகும்’ என்றார்.

பிறகு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும் .,

நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பில் எதிர்காலத்தில் தவறு நேராத வகையில் இருப்பதற்கான தீர்வுகளை சிபிஎஸ்இ உள்ளிட்ட மனுதாரர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கினை ஒத்தி வைத்தனர்.

இந்த தீர்ப்பு வெளியான பின்னர் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் “கடந்த ஆண்டு 20 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் நீட் தோர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், நிகழாண்டு நீட் தேர்விற்காக 412 மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், பயிற்சியளிக்க 319 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டு நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.