27 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல. நீங்கள் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களுக்கு முன், எண்ணிக்கை பலம் நிற்கவே முடியாது என்று ஆ.ராசா கண்டனக் குரல் எழுப்பினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18, 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சி எம்பிக்கள் மக்களவை, மாநிலங்களவை உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இரு அவைகளிலும் இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கியது. இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 25 ஆம் தேதி மக்களவையில் பதாகைகளுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி மாநிலங்களவையில் திமுக, காங்கிரஸ் உட்பட 19 எம்பிக்கள், ஒரு வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே 50 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே மேலும் 1மாநிலங்களவை எம்பியும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த இடைநீக்கம் உத்தரவை கண்டித்து இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (28.07.2022) ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் சுஷிர் குமார் குப்தா, சந்தீப் குமார் பதக், சுயேட்சை எம்.பி. அஜித்குமார் புயான் ஆகிய 3 மாநிலங்களவை எம்பிக்கள் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் முழுவதும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இடைநீக்கம் செய்யப்பட்ட மொத்த எம்பிக்கள் (மக்களவை-4, மாநிலங்களவை-23) எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மக்களவை நேற்று கூடியதும் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பிரச்சனை எழுந்தது.

அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா, “விதிகளை மீறினால் நடவடிக்கைதான். நடவடிக்கை எடுக்க விரும்பாத என்னை அதைச் செய்ய வைத்துவிடுவீர்கள் என அஞ்சுகிறேன். தயவு செய்து ஒத்துழையுங்கள்” என்றார்.

இதை எம்.பி.க்கள் ஏற்க மறுக்கவே அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட் டது. பிறகு அவை மீண்டும் கூடியபோது, திமுக கழக கொறடா ஆ.ராசா எம்.பி. பேசிம்போது, “எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல. சபையின் மையப் பகுதிக்கு வருவதோ, ஜனநாயக முறைப்படி பதாகைகளை ஏந்தி கோஷம் போடுவதோ, புதிய விஷயம் இல்லை. இருந்தும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து விட்டார்.

நீங்கள் பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஆரோக்கியமான விவாதங்களுக்கு முன், எண்ணிக்கை பலம் நிற்கவே முடியாது. எனவே, எம்.பி.க்களின் இடைநீக்கம் நடவடிக்கையை ரத்து செய்யுங்கள்” என்று கண்டனக் குரல் எழுப்பினார்.