நாடு முழுவதிலும், மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியும் .,மத்திய பாஜக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் இதுதொடர்பாக பிற அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மத்திய சட்ட ஆணையம் கேட்டறிந்து வருகிறது.

ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த பாஜக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, சட்ட ஆணையத்துக்கு கடந்த திங்கள்கிழமை கடிதம் எழுதியிருந்தும் குறிப்பிடதக்கது.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தில்லியில் செய்தியாளார்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தபோது, ஒரே தேர்தல் திட்டம் விரைவில் அமலாக வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் தற்போது  மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமெனில் சட்ட நடைமுறையை வகுப்பது அவசியமானது என்றும் மேலும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடித்து வைப்பது அல்லது பதவி நீட்டிப்பு வழங்குவது தொடார்பாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாமல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்

மேலும் அவர் , ‘‘மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை முடித்து வைக்கவோ அல்லது நீட்டிக்கச் செய்யவோ வேண்டுமெனில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை 100 சதவீதம் கொள்முதல் செய்வது உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது இத்திட்டத்துக்கு தடங்கலாக இருக்கும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைகளை 2015-ஆம் ஆண்டிலேயே தெரிவித்து விட்டோம். கூடுதல் பாதுகாப்பு படையினர், தேர்தல் அலுவலா்கள் போன்ற தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது’’ என்றார்.

அடுத்த ஆண்டில் நடைபெறறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வருகிறது.

தேர்தலுக்கான 13.95 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9.3 லட்சம் கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகள் செப்டம்பர் இறுதியிலும், 16.5 லட்சம் வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கை நவம்பர் மாத இறுதியிலும் நிறைவுறும் என்று ஓ.பி.ராவத் ஏற்கெனவே கூறியிருந்தார்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனில், மக்களவைத் தேர்தலுக்கு தேவைப்படுவதைப் போன்று மேலும் ஒரு மடங்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதாவது, மொத்தம் 24 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும்.

ஆகவே, கூடுதலாக 12 லட்சம் வாக்குப்பதிவு மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ.4,500 கோடி செலவாகும் என்று, கடந்த மே 16-ஆம் தேதி சட்ட ஆணையத்துடன் பரிசீலனை மேற்கொண்டபோது தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. .