பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.85,316 கோடியாகும். இதில் அரசின் பங்கு மட்டும் 45,200 கோடி.

இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 16,309 பெட்ரோல் நிலையங்களும், 4 சுத்திகரிப்பு ஆலைகளும் உள்ளன. இந்நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால் தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.

இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், நிச்சயமாக இந்த முடிவில் மாற்றம் இல்லை என்பதே எனது பதிலாகும்.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் பாரத்நெட் டெண்டரில் முறைகேடு; அதிரடி ரத்து

எண்ணெய் சந்தைப்படுத்துதல் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதில் எந்த மாற்றமும் இல்லை. இந்நிறுவனத்தை எப்போது விற்பனை செய்வது என்பது குறித்து நானும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆலோசித்து வருகிறோம். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அது முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.