நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், அறம் பட இயக்குனர் கோபி நையினார் உள்ளிட்ட 100 இயக்குனர்கள் இணைந்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி மக்களவைத் தேர்தல் தொடங்க இருக்கிறது. தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள இயக்குனர் ஆசிக் அபு, தமிழ் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், கோபி நையினார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இயக்குனர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதற்காக இணைதளம் ஒன்றை தொடங்கி அதில் அனைவரும் ஒன்றினைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அறிக்கையில் “வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாம் அனைவரும் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்றால், பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கு நாம் மேலும் ஆளாக வேண்டியிருக்கும். நாட்டில் வகுப்புவாத சூழலை உருவாக்கி தாக்குதல் நடத்துவது, பசு பாதுகப்பு என்ற பெயரில் அப்பாவி தலித் மக்கள் கொல்லப்படுகின்றனர். தேச பற்று என்ற வார்த்தையை தனது ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது.
யாராது தனி நபரோ, அமைப்போ எந்தப் பிரச்னைக்காகவாவது குரல் கொடுத்துவிட்டால் தேச விரோதி என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். நம்மிடையையே இருந்த முக்கியமான எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களை நாம் இழந்திருக்கிறோம். மேலும் பாஜகவிற்கு எதிராக யாராவது கருத்து சொன்னால் அவர்களை கொன்றுவிடுகிறார்கள்.
நாட்டின் பாதுகாப்பு படைகளை அவர்களுடைய தந்திரங்களுக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். தேவையற்ற போர் சூழலை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடிகொள்கின்றனர். தகுதியற்றவர்கள் முக்கிய நிறுவனங்களுக்கு தலைவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பணக்காரர்களின் கைக்கூலியாக பாஜக செயல்படுகிறது.
இதனால் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கின்ற, நம்முடைய அனைத்து வகையான சுதந்திரத்தை பாதுகாக்கின்ற அரசாங்கத்தை தேர்வு செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.