தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் யோகிபாபு நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன. இன்று நயன்தாராவுடன் யோகிபாபு நடித்த ‘ஐரா’ ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், ஏப்ரல் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் ஜிவி பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார். ஏப்ரல் 12ஆம் தேதி வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ படத்திலும் யோகிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே மாதம் ரிலீஸ் ஆகும் ஜீவாவின் ‘கொரில்லா’ படத்திலும் யோகிபாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘தர்மபிரபு’ திரைப்படமும் மே மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மபிரபு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முத்துகுமரன் இயக்கத்தில் யோகிபாபு எமனாக நடித்துள்ள இப்படத்தின் டீசரை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எமலோகத்தில் எமன் பதவி தேர்தல் நடப்பதையும், அதற்காக போட்டியிடும் எமன் வாரிசான யோகிபாபுவும், சித்ரகுப்தனாக இருக்கும் கருணாகரனும் போட்டியிடுவதும், அதில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. புதுவிதமான கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.