எங்களது மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என நாங்கள் சொல்லவேயில்லை என பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், கடந்த 23ஆம் தேதியன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற மருந்தை அறிமுகப்படுத்தியது. இம்மருந்து கொரோனா வைரஸை குணப்படுத்தும் சக்தி கொண்டது எனவும் பகிரங்கமாக விளம்பரப்படுத்தியது.

இம்மருந்தை ஏழு நாட்கள் சோதனை செய்ததில், இம்மருந்தை எடுத்துக்கொண்ட அத்தனை கொரோனா நோயாளிகளும் 100% குணமடைந்துவிட்டதாகவும் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்தது.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்ராம் ஜகத் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா, மூத்த அறிவியலாளர் அனுராக் வர்ஷ்னே ஆகியோர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், எங்களது ‘கொரோனில்’ மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்றோ, கட்டுப்படுத்தும் என்றோ நாங்கள் சொல்லவேயில்லை. மருந்து தயாரித்துள்ளோம். அவற்றை சோதித்ததில் கொரோனா நோயாளிகள் குணமடைந்ததாக மட்டுமே தெரிவித்தோம். இதில் எந்த குழப்பமும் இல்லை என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

மேலும் வாசிக்க: பாபா ராம்தேவின் பதஞ்சலி சளி, காய்ச்சல் மருந்துக்கே அனுமதி பெற்றது; கொரோனாவுக்கு அல்ல..