சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்ற அடிப்படையில்தான் ராம்தேவ் கம்பெனியின் கொரோனில் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது; கொரோனாவுக்கு அல்ல என்று உத்தரகாண்ட் அரசு விளக்கம் அளித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதஞ்சலி நிறுவனத் தலைவர் பாபா ராமதேவ், கொரோனாவுக்கு கொரோனில் ஸ்வாசரி எனும் மருந்து கண்டுபிடித்துவிட்டோம். 3 நாட்களில் இருந்து 7 நாட்களுக்குள் 100% கொரோனா குணமாகிவிடும் என்று அறிவித்தார். மேலும் இந்த பரிசோதனைகள் அனைத்துக்கும் முறையான அனுமதி வாங்கி, மொத்தம் 280 கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறோம் என்றும் கூறினார் ராம்தேவ்.

கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் போராட்டம் நடத்து வரும் நிலையில், பாபா ராம்தேவ்வின் அறிவிப்பு பெரும் சர்ச்சையானது. இதனால் மத்திய அரசு, ராம்தேவ் நிறுவனம் குறிப்பிட்ட மருந்து தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், அதுவரை மருந்துகளை விளம்பரம் எதுவும் செய்யக் கூடாது என தடை விதித்தது.

மேலும் உத்தரகண்ட் மாநில அரசிடம் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களின் நகல்கள், அனுமதி விவரங்கள் ஆகியவற்றையும் ஆயுஷ் அமைச்சகம் கோரிஇருந்தது.

மேலும் வாசிக்க: கோவிட் -19 மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகத்தால் எச்சரிக்கப்பட்ட பதஞ்சலி

இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு புதிய விளக்கம் அளித்துள்ளது. அதில், “பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனில் மருந்து என்பது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதனடிப்படையில் மட்டும் தான் அந்த மருந்துக்கு உத்தரகாண்ட் ஆயுஷ் துறை விற்பனைக்கான உரிமம் வழங்கியிருக்கிறது என விளக்கமளித்துள்ளது.

மேலும் ராம்தேவின் கொரோனில் மருந்து, கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்தக் கூடிய மருந்து என்பதற்காக நாங்கள் உரிமம் வழங்கவில்லை. அது தவறானது என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்தது தொடர்பாக ராம்தேவ் கம்பெனியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம்” என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. உத்தரகாண்ட் அரசின் இந்த விளக்கம் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பிய, போலி சித்த மருத்துவர் தணிகாச்சலம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.