தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிராக தீவிரமாக போராடிக்கொண்டு இருக்கும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

கோவையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் மருத்துவமனை கல்லூரியின் டீனுக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், மருத்துவமனை மெஸ்ஸை மூடிவிட்டதால் எங்களுக்கு போதிய உணவு, தண்ணீர் கிடைப்பதில்லை என்று புகார் கூறியுள்ளனர். கோவையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தற்போது இதே நிலைமைதான்.

தமிழகத்தில் தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும் மிகப்பெரிய அளவில் பாதுகாப்பு உபகரணங்களுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. மாஸ்க், கிளவுஸ், கண்ணாடிகள், உடலை பாதுகாக்கும் பிபிஇ (PPE) வகை உடைகள் ஆகியவை மிகப்பெரிய தட்டுப்பாடாக உள்ளது.

மேலும் ஒரு பாதுகாப்பு உடையை 5 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஆபத்து என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு நாள் முழுக்க ஒரே பாதுகாப்பு உடையை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி- உளவியல் பாதிப்பா?

தற்போது மருத்துவர்கள் அதிக நோயாளிகள் உள்ள மருத்துவமனையில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வேலை செய்கிறார்கள். இதில் சில மருத்துவமனைகளில் உணவு இடைவேளை கிடைத்தாலும் சாப்பிட சாப்பாடு இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது

கொரோனா காரணமாக மருத்துவர்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி இவர்கள் மருத்துவமனையிலேயே தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதிகமான நோயாளிகள், தொடர் பணிகள், தனிமைபடுத்துதல் காரணமாக இவர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 1173 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 12 மருத்துவர்கள் மற்றும் 5 மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3 மருத்துவர்களுக்கு கொரோனா ஏற்பட்டது. இதில் 7 பேர் தமிழக அரசு மருத்துவர்கள்.

இந்நிலையில், கொரோனா அறிகுறியோடு சிகிச்சைபெற்று வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 60 வயது மருத்துவர் நேற்று பலியாகி உள்ளார். சென்னையில் பலியான இவரின் உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற போது அச்சம் காரணமாக அம்பத்தூர் பகுதி மக்கள் இவரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் மருத்துவரின் உடலை மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு வந்துள்ளனர். இதுதான் தமிழக அரசின் மருத்துவர்கள் மீதான அக்கறை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஊரடங்கின் போது பிரதமர் மோடி மருத்துவர்களை பாராட்டும் வகையில் கைதட்ட சொன்னார். ஆனால் இப்போதுவரை மருத்துவர்களுக்கு என்று திட்டங்களோ, அறிவிப்பையோ வெளியிடவில்லை. தமிழக அரசும் இவர்களுக்கு என்று எந்த விதமான அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. மருத்துவர்களுக்காக கைதட்டினால் மட்டும் போதாது அவர்களை பாதுகாப்பதுதான் அவசியம் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.