வேதா இல்லத்தில் எந்த அறையும் சீலிடப்படவில்லை. ஜெயலலிதா அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை என்று போயஸ் இல்லத்திற்குள் சென்று வந்த பின் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அப்போது அட்சியில் இருந்த அதிமுக அரசு ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசுடமையாக்கியது. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் இருவரும் தாங்கள் வாரிசுகள் என்று வேதா இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 2 வாரங்களுக்கு முன்பு தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது செல்லாது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவருடைய அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் இருவரும் வாரிசுகள். எனவே 3 வாரங்களுக்குள் வேதா இல்லத்தின் சாவியை அவர்களிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தீபாவும் தீபக்கும் வரவேற்றனர். அதே நேரத்தில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யா உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா இல்லத்தின் சாவியை சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி இன்று (10.12.2021) தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து ஆட்சியர் விஜயராணி கூறுகையில், “நீதிமன்ற உத்தரவின்படி வீட்டுச்சாவியை கேட்டு தீபா, தீபக் இருவரும் மனு செய்து இருந்தனர். இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில், இன்று போயஸ் கார்டன் வேதா இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது” என்றார்.
வேதா இல்லத்தின் சாவியைப் பெற்றுக்கொண்ட ஜெ.தீபா கூறுகையில், மகிழ்ச்சியை வார்த்தைகளில் எல்லாம் சொல்ல முடியாது. இதை மகிழ்ச்சி என்று கூட சொல்ல முடியாது. எங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் அத்தையின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்.
அந்த வீட்டுக்குள் நான் போககூடாது என்று எதிர்ப்பு இருந்த நிலையில், பெரிய போராட்டத்துக்கு பிறகு இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இது அத்தையின் ஆசிர்வாதம். அங்கே சென்று பார்த்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். நான் அங்கே தான் வசிப்பதற்கு முடிவு செய்திருக்கிறேன். எப்போது அங்கே குடியேறப் போகிறேன் என்பதை பின்னால் கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜெ.தீபாவும் ஜெ.தீபக்கும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு சென்றனர். பல மாதங்களாக பூட்டப்பட்டிருந்த வேதா இல்லம் இன்று வருவாய் வட்டாட்சியர் முன்பு திறக்கப்பட்டது. பின்னர், வேதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு ஜெ. தீபாவும் ஜெ. தீபக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சென்று பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. தீபா, “போயஸ் இல்லத்தில் எந்த அறையும் சீலிடப்படவில்லை. ஜெயலலிதா வாழ்ந்த போது இருந்த வீட்டுக்கும், இப்போது இருக்கும் வீட்டுக்கும் நிறைய மாற்றம் உள்ளது. ஜெ அத்தை பயன்படுத்திய உண்மையான பொருட்கள் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.