முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி கன்டோன்மென்ட்டில் உள்ள பரார் சதுக்கத்தில் 17 பீரங்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அவர்களுடைய 2 மகள்கள் இறுதிச் சடங்கு செய்தனர்.

குன்னூர் அருகே நேற்று முன் தினம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நேற்று (டிசம்பர் 9) வெலிங்டன் ராணுவ பயிற்சிப் பள்ளியில் வைக்கப்பட்டது. அங்கே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அங்கிருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்தில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டன.

அங்கு அவர்களின் உடல்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஒன்றிய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினர்.

மேலும் இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மற்றும் அண்டை நாடுகளின் தூதரக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, பாலம் விமாப்படை தளத்திலிருந்து பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்கள் டெல்லி காமராஜர் சாலையில் உள்ள அவர்களது அதிகாரபூர்வ இல்லத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இன்று (10.12.2021) பிற்பகல் டெல்லி காமராஜ் சாலை உள்ள இல்லத்தில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியவாறும், பிபின் ராவத் புடைப்படம் இடம்பெற்ற பதாகைகளை எடுத்துக் கொண்டும் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தனர்.

ஊர்வலம் கண்டோன்மென்டை அடைந்ததும், அங்குள்ள ப்ரார் சதுக்க தகன மையத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத் உடல்களுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பிபின் ராவத்- மதுலிகா ராவத்தின் உடல்களுக்கு அவர்களுடைய மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகளை செய்து பெற்றோர்களின் உடல்களுக்கு தீ மூட்டி தகனம் செய்தனர். இறுதி நிகழ்வில் பிபின் ராவத் உறவினர்களும் பங்கேற்றனர்.

அப்போது, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மதுலிகா ராவத்துக்கு மரியாதை செய்யும் விதமாக பிபின் ராவத் முதல் முதலில் பணியாற்றிய கூர்கா படைப்பிரிவு 17 பீரங்கி குண்டுகளை முழங்க முழு ராணுவ மரியாதை செய்தனர். இறுதி நிகழ்ச்சியில் 800 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்.