மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 24) விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் தொல். திருமாவளவன்.

இது தொடர்பாக திருமாவளவன் தமது டிவிட்டர் பக்கத்தில், “மகளிரை இழிவுசெய்யும் மனுஸ்மிருதியைத் தடை செய்! தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்! பிற்படுத்தப்பட்ட மக்களையும்,
ஆதிக்குடிகளையும்,பெண்களையும் மிகக்கேவலமாக இழிவுபடுத்துவதும் வெறுப்பைப் பரப்புவதுமான மனுஸ்மிருதியை தடை செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுஸ்மிருதி, அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களையும் மிகக் கேவலமாக இழிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுகிறது. அவர்களைக் கொலைசெய்வதையும் நியாயப்படுத்துகிறது என்று விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் பெண்கள் தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “பெண்கள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு, அவர்களது கூட்டணிக் கட்சியான திமுக ஏன் பதில் சொல்லவில்லை? காங்கிரஸ் ஏன் பதில் சொல்லவில்லை?

பெண்களை விபச்சாரி என்று சொல்வதுதான் உங்கள் கொள்கையா? பெண்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்கள் ஓட்டு போடுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் இந்த விவகாரத்தில் திமுக எம்.பி கனிமொழி ஏன் இதுவரை பதில் சொல்லவில்லை அல்லது கண்டிக்கவில்லை என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

மனு தர்மத்தில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததைத்தானே திருமாவளவன் சுட்டிக்காட்டினார் என்று குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதில் பெண்களைக் கேவலப்படுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை. ஒரு கட்சித் தலைவர் அதை புரிந்துகொண்டு பேசியிருக்க வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வோம் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக