தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் சோமசுந்தரம் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிராஜா, பாலா, தினேஷ், பாண்டி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி இசக்கி ராஜாவும், பாலாவும் சுத்தம் செய்துள்ளனர்.
தொட்டிக்குள் சென்ற இசக்கி ராஜா, பாலா ஆகிய இரண்டு பேரும் உள்ளேயே மயங்கி விழுந்து உள்ளனர். அவர்களை மீட்க தினேஷ், பாண்டி இருவரும் அடுத்தடுத்து சென்றுள்ளனர். இவர்கள் நான்கு பேரும் விஷயவாயு தாக்கி உள்ளேயே அவர்கள் மயங்கி விழுந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து 4 பேரின் உடல்களையும் மீட்டனர். நால்வரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் வரவழைக்காமல் டிராக்டரில் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது.
மேலும் வாசிக்க: உதயநிதி கிடுக்குபிடி.. சிக்கிய சேவாபாரதி; பதற்றத்தில் பாஜக..
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், கழிவுநீர் தொட்டிகளில் கழிவுகளை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதால் தான் உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்திலும், நாம் இன்னும் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நிலையை மாற்ற வேண்டும். கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 3, 2020
இந்நிலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மரணமடைந்த 4 பேர் குடும்பத்தினருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து, நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.