தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு 10 துணைத் தலைவர்கள் உட்பட பிரபல நடிகைகளான நமீதா, கௌதமி, குட்டி பத்மினி மற்றும் மதுவந்தி ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு துணையாக 10 துணைத் தலைவர்களை நியமனம் செய்துள்ளது அக்கட்சியின் தேசியத் தலைமை. அதில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன், திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார்கள்.

பாஜக மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன், கரு.நாகராஜன் உட்பட 4 பேர் தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் பாஜக கலைப்பிரிவு மாநில தலைவராக காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நடிகைகள் கவுதமி, குட்டி பத்மினி, நமீதா, மதுவந்தி உள்ளிட்டோர் தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் அண்மையில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தேசிய பொதுக்குழுவில் தமிழகம் சார்பில் 39 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: இந்திய ரயில்வே: ‘ஏழைகளின் உயிர்நாடியை பறிக்கிறீர்கள்’… ராகுல் காந்தி எச்சரிக்கை