விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சீக்கிய குருத்வாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் இப்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்தும் டெல்லி சலோ போராட்டம் குறித்து போலியான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் சாகீன் பாக் போராட்டத்தில் கலந்து கொண்ட 80 வயது மூதாட்டியின் படத்தை பகிர்ந்து, இவர் 100 ரூபாய் கொடுத்து போராட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக கிண்டல் செய்து நடிகை கங்கனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கங்கனாவின் இந்த ட்வீட் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி நெட்டிசன்கள், பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா உள்ளிட்ட பலரும் அவரை வறுத்தெடுத்தனர்.
காரணம் உண்மையில் அந்த மூதாட்டி பஞ்சாபில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர். இந்நிலையில் மூதாட்டியை கிண்டல் செய்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்காக நடிகை கங்கனா ஒருவாரத்துக்குள் மன்னிப்பு கேட்கக்கோரி டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடும் எதிர்ப்பை தொடர்ந்து ட்விட்டரில் தனது பதிவை கங்கனா நீக்கியுள்ளார்.
இதுகுறித்து 80 வயது மூதாட்டி கூறும்போது, “அந்த நடிகை, என் வீட்டிற்கு வந்து என் வாழ்க்கையை பார்த்திருக்கிறாரா… ரூ.100 கொடுத்தால் நான் போராட்டத்துக்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம். ஒரு விவசாயி என்ற முறையிலேயே நான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான விஷயம். அது தெரியாமல் நடிகை இப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது” என வேதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் கங்கனாவுக்கு, இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
நடிகை கங்கனா காவல் நிலையத்தில் ஜனவரி-8 நேரில் ஆஜராக உத்தரவு- மும்பை உயர்நீதிமன்றம்