நாடு முழுவதும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக் (FASTag) முறை அமுலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.
இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தபடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அதன்படி, சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 15 ஆம் தேதி நள்ளிரவு முதல் வாகனங்களில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்களும் பாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பாஸ்டேக் பெற்று செல்கின்றனர்.
இதனையடுத்து பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பல்வேறு சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டணம் தர மறுத்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகன ஓட்டிகளை பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வாங்கி வாகனத்தில் ஒட்டும்படி அறிவுரை வழங்கினார்கள்.
நாட்டிலேயே முதல் ‘பாலின பூங்கா’ திட்டம்: கேரள முதல்வர் அதிரடி