டெல்லி செங்கோட்டையில் வன்முறையை தூண்டியதாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையால் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு மேலும் 7 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், சிலர் டெல்லி செங்கோட்டைக்குள் சென்று அத்துமீறலில் ஈடுபட்டு, சீக்கியர்களின் கொடியை ஏற்றினர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக வன்முறையில் தொடர்புடைய 12 பேரின் புகைப்படங்கள் வெளியானது. அந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த வன்முறைக்கும் நடிகர் தீப் சித்துவிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் தீப் சித்துவை தேடி வந்தனர். மேலும் அன்றைய தினம் வன்முறையில் ஈடுபட்டதாக ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் ஆகியோரையும் தேடி வந்தனர்.

தீப் சித்து குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், மற்ற 4 பேர் குறித்து தகவல் அளித்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் சுமார் 14 நாட்கள் தேடப்பட்டு வந்த தீப் சித்து பிப்ரவரி 09 ஆம் தேதி காலை டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியின் பேரில் போலீஸ் காவலில் தீப் சித்து வைக்கப்பட்டார். அவரிடம், டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவரை கடந்த சில நாட்களுக்கு முன் வன்முறை நடந்த செங்கோட்டை பகுதிக்கு அழைத்து சென்று, சம்பவம் நடந்தது குறித்து நடித்துக் காட்ட கூறினர்.

இந்நிலையில், இன்றுடன் போலீஸ் காவல் முடிந்த நிலையில், இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில் தீப் சித்துவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீப் சித்துவை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

டெல்லி செங்கோட்டை முற்றுகை; பின்னணியில் பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..