கடந்த மாதம் 29ம் தேதி சென்னை மற்றும் கோவையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட கடைகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கிடைத்திருக்கும் தகவல் பகீர் ரகம்
 
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சென்னை தியாகராயர் நகரில் கிளை பரப்பியிருக்கும் அந்த முக்கியமான கடைகளில் மட்டும் ரூ.420 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடத்தப்பட்டிருப்பதாக பெயர் கூற விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
 
அதாவது, சென்னை பாடி, குரோம்பேட்டை என பல இடங்களில் கிளை பரப்பியிருக்கும் சரவணா ஸ்டோர் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் 35 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளது.
 
எனவே, இதேத் தொகையை கடந்த 3 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டுள்ளோம். அவர்களது ஒரு நாள் வருமானம் ரூ.1.2 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
 
இதில்லாமல், பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் ரூ.25 கோடி மதிப்புள்ள பணமும், 12 கிலோ தங்கமும், 625 காரட் வைரமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில், லோட்டஸ் குழுமம் மற்றும் ஜி ஸ்கொயர் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
 
இந்த நிறுவனங்கள்தான், சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்துக்கு மாநிலம் முழுவதும் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட உதவியுள்ளது. அதே போல சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரின் மகன் யோகரத்தினம் பொன்துரை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
 
இந்த சோதனையின் மூலம் தெரிய வந்திருக்கும் பகீர் தகவல் என்னவென்றால், சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் விற்பனையாகும் பொருட்களின் கணக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரிலேயே, லாபத்தைக் குறைத்துக் காட்டும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
கிரி டெக்னாலஜிஸ் நிறுவனம் வழங்கிய இந்த மென்பொருளில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஒரு சின்ன மாற்றத்தை மட்டும் செய்துள்ளது.
 
அதாவது, ஒவ்வொரு முறை ரூ.20 கோடிக்கு பொருள் விற்பனை ஆகும் போதும், அந்த மென்பொருள் தானாகவே ரூ.10 கோடிக்கு விற்பனை ஆனதாக மாற்றிக் கொள்ளும். இதன் மூலம் குறைந்த வருவாயைக் காட்டி, வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
 
அதில்லாமல், கடந்த 3 மாத காலத்துக்கு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் எந்த விற்பனை, வருவாய்க் கணக்கும் வைத்திருக்கவில்லை என்பதும் அடுத்த அதிர்ச்சித் தகவலாக உள்ளது.
 
120 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 800 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
 
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.