ஒன்றிய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாகக் கூறி, பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், ஒன்றிய பாஜக அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக “தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021” கொண்டு வந்தது.

இந்த புதிய விதிகளுக்கு சமூக ஊடகங்கள் இணங்கி நடக்க ஒப்புதல் அளிக்க கடந்த மே 25 ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. இதற்கு கூகுள், பேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைத்தளங்கள் ஒப்புதல் தெரிவித்து, தங்கள் சேவையைத் தொடர்கின்றன. ஆனால் ட்விட்டர் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், அனைத்து குடிமக்களுக்கும் தனி உரிமையை உறுதி செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், அதேநேரம் சட்டம் ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்யும் பொறுப்பும் தங்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டுவந்த விதிகளை எதிர்த்து, பிரபல கர்நாடக இசைக் கலைஞரான டி.எம்.கிருஷ்ணா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

டி.எம்.கிருஷ்ணா தனது மனுவில், ஒரு இசைக் கலைஞர், கலாச்சார மற்றும் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் அரசியலமைப்பு வழங்கியுள்ள சுதந்திரமான கருத்துரிமை, தனியுரிமை ஆகியவற்றை மதிப்பதாகவும், தனியுரிமை என்பது இசையைப் போல ஒரு அனுபவம்.

தனியுரிமை என்பது ​​வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும், அவை சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், தன் விருப்பப்படும்படி கிடைக்கும்போது தான் தன்னைப் போன்றோர் ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும்.

மேலும், ஒவ்வொரு கலைஞனின் தனியுரிமையையும் அங்கீகரித்துள்ள உச்சநீதிமன்றம், அதன் தீர்ப்பில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருப்பான் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஒரு கலைஞனுக்கும், அவனது படைப்பாத்மாவிற்கும் உள்ள தொடர்பே தனியுரிமை என குறிப்பிட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நமது அரசியலமைப்பில் வழங்கப்பட்ட கற்பனை சுதந்திரத்தை, ஒன்றிய அரசின் புதிய விதிகள் தணிக்கை செய்ய காரணமாக அமைந்துள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ஒரு கலைஞன் மற்றும் கலாச்சார வர்ணனையாளரான தனது உரிமையை பறிக்கும் வகையில் இருப்பதாகவும்,

சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் தனது உரிமைகளை பறிப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஒன்றிய அரசின் புதிய விதிகளை ரத்து செய்யக் கோரிய டி.எம்.கிருஷ்ணாவின் மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 3 வாரங்களில் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

நிவாரணப் பொருட்களை திருடிய புகார்; பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு