சிபிஐ இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. பீகாரின் முசாஃபர்பூர் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கை விசாரித்த அதிகாரி மாற்றப்பட்டார்.
 
இந்த வழக்கு விசாரணை அதிகாரியை மாற்றிய நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவில் நாகேஸ்வர ராவ் தலையிட்டுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் பிப்ரவரி 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நாகேஸ்வர ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 
இதே நாகேஸ்வர ராவ் தான் மேற்குவங்கத்தில் சிபிஐ அதிகாரிகளை அனுப்பி மேற்கு வங்க போலிஸ் கமிஷனர் மம்தா மாநில சுயாட்சி கோரி போர்கோலம் எடுக்க காரணமாக அமைந்தவர்

மேலும் வாசிக்க : உச்சநீதிமன்ற உத்தரவு எங்களின் வெற்றி என மம்தா மகிழ்ச்சி

 
பீகாரின் முசாஃபர்பூர் நகரில் உள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, சிபிஐ, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை நடத்தி வருகிறது.
 
பீகாரில் சிறார்கள், பெண்கள், முதியோர் காப்பகங்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் தொடர்பான 16 வழக்குகளையும் சேர்த்து சிபிஐ விசாரிக்க கடந்த நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மேலும் உச்சநீதிமன்றத்திடம் முன்அனுமதி பெறாமல் வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளை மாற்றக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் சிபிஐ இடைக்கால இயக்குனராக பதவி வகித்த போது நாகேஸ்வர ராவ் சில அதிகாரிகளை பணிஇடமாற்றம் செய்தார்.
 
இதில், பலாத்கார வழக்கை விசாரித்த ஏ.கே. சர்மாவும் அடங்குவார். இடமாற்றத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் பணியிடமாற்றம் செய்ததற்கு தலைமை நீதிபதி அமர்வு கடும் அதிருப்தி தெரிவித்தது. இதனை மிகவும் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொள்ளப் போவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
 
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவோடு விளையாடியவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவோடு ஒருபோதும் விளையாட வேண்டாம் என நீதிபதிகள் சிபிஐ-யை எச்சரித்தனர்.
 
ஏ.கே.சர்மாவை பணியிட மாற்றம் செய்ததன் மூலம் நாகேஸ்வரராவ் நீதிமன்றத்தை அவமதித்திருப்பதாக கருதுவதற்கு முகாந்திரம் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதுகுறித்து 12-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.