தஞ்சை பெரிய கோயிலில் யார் பஜனை நடத்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
வாழும் கலை அமைப்பு சார்பில், அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், கடந்த வாரம் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தியான நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அங்கு பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலில் இதுபோன்ற தனியார் தியான நிகழ்ச்சி நடத்த அனுமதியளித்தது அப்பட்டமான சட்ட விதிமீறல் ஆகும்.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்நிகழ்ச்சிக்கு வருவோரிடம் கட்டணமும் வசூலித்துள்ளனர். எனவே, பெரிய கோயில் வளாகத்தில் தியான நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகளிடம் வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன் முறையிட்டார்.
இதனை ஏற்று, அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிகழ்ச்சிக்கு தடை விதித்ததோடு மத்திய தொல்லியல்துறை அதிகாரி 13-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தொல்லியல் துறை சார்பில், கோயில் நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று பெரிய கோயிலில் பஜனை நடத்த அனுமதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அப்படியென்றால் யார் பஜனை நடந்த அனுமதி கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா எனக் கட்டமாக கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இது ஏற்க தக்கதல்ல என்று கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இந்த கேள்விக்கு பதில் சொல்ல தெரியமால் மத்திய அரசின் தொல்லியல்துறை அதிகாரி முழி முழித்தார் .
இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.