நிபா வைரஸ் பாதிப்புக்கான நோய் எதிர்ப்புத் திறன், அதனைப் பரப்பும் வௌவால்களிடமே இருப்பது அவற்றின் மாதிரிகளின் ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் இன்னும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கொரோனா பாதிப்பில் 50%க்கும் மேலான பாதிப்பு கேரள மாநிலத்தில் மட்டுமே பதிவாகிறது.

இந்நிலையில் செப்டம்பர் தொடக்கத்தில் நிபா வைரஸ் பாதிப்பும் கேரளாவில் பரவத் தொடங்கியது. கடந்த 5 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான்.

இதனையடுத்து உஷாரான மாநில சுகாதாரத் துறை, கோழிக்கோடு பகுதி முழுவதும் வீடுகள் தோறும் மாதிரிகளை சேகரித்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியது. அப்பகுதி முழுவதும் நிபா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

மேலும் கேரள அரசு மேற்கொண்ட ஆய்வில், ரம்புட்டான் பழத்தினை சிறுவன் உட்கொண்டதும் அதன் வாயிலாகவே சிறுவனுக்கு நிபா தொற்று ஏற்பட்டதும் உறுதியானது. அந்தச் சிறுவன் ரம்புட்டான் பழத்தை வாங்கிய பகுதியிலிருந்த ரம்புட்டான் பழங்களில் வௌவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவியதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர், சில வௌவால்களின் உடலில் இருந்து சில மாதிரிகளை சேகரித்து, அந்த மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிபா வைரஸுக்கு எதிரான நோய்த்திறன் அதனைப் பரப்பும் வௌவால்களின் உடலிலேயே இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஐசிஎம்ஆர் மேலும் சில ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாகவும், கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு குறித்துப் பேசிய வீணா ஜார்ஜ், இதுவரை கேரளாவில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் 91.9% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ், நிபா வைரஸ் என அடுத்தடுத்து தாக்கும் உயிர்க்கொல்லி நோய்கள் வௌவால்கள் மூலமே பரவுவதாகக் கூறப்படுவதால் அவற்றின் மீது வெறுப்புப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கு வன உயிர் ஆர்வலர்கள் கடும் கண்டனமும் வருத்தமும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நிபா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடியும் வௌவால்களின் உடலிலேயே இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி ஆறுதல் அளிப்பதாக உள்ளது என வன உயிர் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நிபா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன்