பிரதமர் மோடியின் பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசார வருகைக்கு எதிராக சமூக வலைதளத்தில் #GobackModi ஹேஷ்டேக் டிரெண்டாகி பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். அதன்படி, முதல் கட்ட தேர்தல், அக்டோபர் 28ந்தேதி 71 தொகுதிகளுக்கும், 2வது கட்ட தேர்தல் நவம்பவர் 3ந்தேதி 94 தொகுதிகளுக்கும், 3வது கட்ட தேர்தல் நவம்பர் 7ம் தேதி 78 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தற்போது பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ்குமார்), பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட பிரதமர் மோடி இன்று பீகார் சென்றுள்ளார். அங்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் உரையாற்றினர்.
பிரதமர் மோடி நாளையும் பீகாரில் பிரசாரத்தை தொடருகிறார். இதனிடையே பிரதமர் மோடியின் பீகார் வருகைக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள், டெல்லியில் இருந்து பலநூறு கிலோமீட்டர் தூரம் நடந்தே பீகார் திரும்ப நேரிட்டதையும், அதுதொடர்பான புகைப்படங்களையும் பலர் பதிவிட்டு, #GobackModi ஹேஷ்டேகுடன் இணைத்துப் பகிரப்பட்டன.
அத்துடன் பீகாரில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மைக்கு என்ன தீர்வு காணப்பட்டது என்கிற கேள்வியும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் கடந்த காலங்களில் பிரதமர் அளித்த வாக்குறுதிகளும் அதை நிறைவேற்றாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டும் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே, தமிழகம், கேரள மாநிலத்தில் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GobackModi டிரெண்டான நிலையில், தற்போது பீகாரிலும், #GobackModi டிரெண்டாகி உள்ளது பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: பிரதமர் மோடி பேச்சுக்கு இவ்வளவு டிஸ்லைகா.. அதிர்ச்சியில் பாஜக