சமீபத்தில் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்தி பிரச்சாரம் செய்ய சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ (The Kashmir Files) திரைப்படத்தை பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் கொண்டாடிவரும் நிலையில், இப்படம் தற்போது விவாதப்பொருளாகி உள்ளது.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும், தீவிரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற படம் மார்ச் 11 ஆம் தேதி வெளியாகியது. இப்படத்தில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

சந்திப்புக்கு பின் பேசிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, “மோடியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றிய பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும்தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை இழிவுபடுத்த சதி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று (15.3.2022) காலை நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இத்திரைப்படம் குறித்து விரிவாகப் பேசினார்.
அவர் கூறியதாவது, “கருத்துச் சுதந்திரம் பற்றி பலர் பேசுகிறார்கள். ஆனால், எமெர்ஜென்சி குறித்து ஒரு படம் எடுக்க முடியவில்லை என்று கேலியாகப் பேசிய பிரதமர் மோடி, உண்மையை மறைக்கத் தொடர்ந்து முயற்சிகள் நடந்ததால் இது சாத்தியப்படவில்லை.

எப்போதும் கருத்து சுதந்தரம் பற்றிப் பாடம் எடுப்பவர்கள், கடந்த ஐந்தாறு நாட்களாக ஆத்திரமடைந்து, உண்மைகள் மற்றும் பிற விஷயங்களின் அடிப்படையில் இந்தப் படத்தைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறார்கள்

உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக அவர்கள் இழிவுபடுத்துகிறார்கள். படத்தை உருவாக்கியவர்கள் தாங்கள் உண்மையாகக் கருதுவதை வெளியிடுகின்றனர். ஆனால் உண்மையைப் புரிந்து கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் இவர்கள் தயாராக இல்லை.

படத்தை இழிவுபடுத்தி பிரச்சாரம் செய்ய கடந்த 5-6 நாட்களாக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. பிரச்சினை திரைப்படம் அல்ல, தேச நலன்களுக்காக உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும். இத்தனை வருடங்களாக மூடி மறைத்து வந்த சரித்திரத்தை, உண்மைகளின் அடிப்படையில் வெளியே கொண்டுவந்து விட்டார்களே என்று அதிர்ச்சி அடைகிறார்கள். எனவே அதற்கு எதிராக அனைத்து முயற்சிகளும் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக உத்தரப் பிரதேசம், ஹரியானா, உத்தரகாண்ட், கோவா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரி இல்லை என அறிவித்துள்ளன. மேலும் இப்படத்திற்கு வரி விலக்கு வேண்டி பாஜகவினரால் பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்எல்ஏக்கள், அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதேபோல், ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏக்களும் அம்மாநில காங்கிரஸ் அரசிடம் வரிவிலக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.