‘தி கேரளா ஸ்டோரி’ டிரெய்லரை பார்க்கும் போது அரசுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் வகுப்புவாதத்தை நோக்கமாகக் கொண்டது போல் தெரிவதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியானது. முக்கிய கதாபாத்திரத்தில் அடா ஷர்மா, சித்தி இட்னானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெளியான முன்னோட்டத்தின் முதல் காட்சியிலேயே பல உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் என்று காட்டப்படுகிறது. டிரெய்லர் முழுவதும் கேரளாவில் இருக்கும் நான்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் முஸ்லிம் பெண்ணாக வருகிறார்.

கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கும் அவர்கள், முஸ்லிம் பெண்ணை பின்பற்றி மூளைச்சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், பின்பு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்காக வேலை செய்ய நாடு கடத்தப்படுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

டிரெய்லரில் ஷாலினி என்ற இந்து பெண் கதாபாத்திரத்தில் வரும் அடா ஷர்மா, லவ் ஜிகாத் மூலமாக காதல் வலையில் வீழ்த்தப்பட்டு முஸ்லிம் பெண் ஃபாத்திமாவாக மதமாற்றம் செய்யப்படுகிறார். பின்பு ஷாலினி உட்பட 48 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்காக வேலை செய்ய வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுவது போல காட்சிகள் இடம்பெறுகிறது.

அடுத்த 20 வருடங்களில் கேரளா, இஸ்லாமிய மாநிலமாக மாறும் என்று நம் முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார் என்று ஒரு வசனம் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது. இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற 4 மொழிகளில் மே 5 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் திரைப்படம் வெளியாக அனுமதிக்கக்கூடாது என்று காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் இப்படம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசும்போது, “மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ இந்தி படத்தின் டிரைலர் அமைந்துள்ளது.

சங் பரிவாரின் கொள்கையை பிரச்சாரம் செய்வதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்பதை, டிரைலரை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிகிறது. கேரள மாநில தேர்தலின்போது அரசியலில் ஆதாயம் அடைய சங் பரிவார் அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.

விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கூட நிராகரித்த ‘லவ் ஜிஹாத்’ குற்றச்சாட்டுகளை படத்தில் வடிவமைத்தது திட்டமிட்ட சதி நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஆனால் சமீபத்தில் லவ் ஜிஹாத் என்ற ஒன்றே கிடையாது என்று ஒன்றிய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். இப்படியான சூழலில் கேரளாவில் மதநல்லிணக்க சூழலை அழித்து வகுப்புவாத விஷ விதைகளை விதைக்க சங்பரிவார் முயற்சித்து வருவது கண்டிக்கத்தக்கது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.