ரஜினி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் தனது பண்ணை வீட்டிற்கு ஓய்வெடுக்க சென்றதற்காக, ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி இன்று (ஜூலை 23) இ-பாஸ் பெற்றுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் இ-பாஸ் பெற்று மருத்துவ அவசர உதவி, உயிரிழப்பு, ரத்த சொந்த திருமணம் போன்ற காரணங்கள் தவிர அவசியம் இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு செல்ல கண்டிப்பான தடை உள்ளது. சில நேரங்களில் மருத்துவ சிகிச்சை என்று கேட்பவர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்படுவதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இ-பாஸ் இல்லாமல் சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் சென்றுள்ளார் என்ற சர்ச்சை எழுந்தது.

இந்த இ-பாஸ் சர்ச்சை குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுத் தான் செல்ல முடியும். 1 லட்சத்து 30 பேர் இ-பாஸ் பெற்ற நிலையில் டேட்டாபேஸ் ஆய்வு செய்து தான் கூற முடியும். இ-பாஸ் வாங்காமல் போயிருந்தால் அந்த மாவட்ட அளவில் தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதுகுறித்து நான் விசாரித்துச் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் வாசிக்க: ஊரடங்கை மீறி ரஜினி உல்லாச காரில் பவனியா… போலீஸ் விசாரணை

ஆனால் ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது என்பதை அன்றைய தேதியை குறிப்பிட்டு, இணையதளத்தில் தேடினாலே தெரிந்து கொள்ள முடியும். இதில் சென்னை மாநகராட்சி ஆணையாளரோ 1லட்சத்தக்கு 30 பேர் டேட்டாவை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில்,இன்று தேதியிட்ட (ஜூலை 23) கேளம்பாக்கம் செல்வதற்காக ரஜினி பெற்ற இபாஸ் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. தனது பண்ணை வீட்டுக்கு சென்று ஒய்வெடுக்கவும், வாக்கிங் போகவும் பல கோடி மதிப்புள்ள லம்போகினி காரை தானே ஓட்டிச்செல்லும் ரஜினிகாந்த், மெடிக்கல் எமர்ஜென்சி என பொய்யுரைத்து, சென்னை மாநகராட்சியிடம் இ.பாஸ் பெற்றுள்ளார்.

பழைய இ-பாஸ் சர்ச்சையை சரி செய்ய ரஜினி இப்போது புதிய இ பாஸ் எடுத்து, அதாவது முன்பே காரில் சென்றுவிட்டு, இப்போது இ-பாஸ் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு இருப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

உண்மையிலேயே அவசர மருத்துவ உதவி கோரி விண்ணப்பித்த பல ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, அவதிப்படும் நிலையில், ரஜினியின் மெடிக்கல் எமர்ஜென்சி என்ற பொய்யான விண்ணப்பம் உடனே ஏற்கப்பட்டது எப்படி என்றும், சாமானிய மக்களுக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா.. என்றும் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.