நடிகர் ரஜினிகாந்த் தனது பல கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பண்ணைவீட்டிற்கு செல்ல உரிய இ-பாஸ் அனுமதி பெற்றாரா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) சென்னை மாவட்டத்தில் உள்ள போயஸ் கார்டன் வீட்டிலிருந்து, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க தனது மகள் சவுந்தர்யா, கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோரும் சென்றுள்ளார்.

பல கோடி மதிப்புள்ள தனது லம்போர்கினி சொகுசு காரில் மாஸ்க் போட்டுக்கொண்டு ரஜினி டிரைவ் செய்து சென்ற போட்டோ வெளியாகி வைரலாகியது. அதனையடுத்து, நடிகர் ரஜினி தன்னுடைய கேளம்பாக்கம் பண்ணைவீட்டில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.

தற்போது தமிழகத்தில் ஜூலை 30 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் செல்ல உரிய இ-பாஸ் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விதிகளை மீறி கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

சென்னை மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உரிய அனுமதியோடு ரஜினிகாந்த் சென்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆணையர் பிரகாஷ், “நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா, சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா என்பது குறித்து விசாரணை செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பத்திரப்பதிவில் புதிய மாற்றம்..