முதல் மூன்று கட்டதேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு கணிசமான இடங்களில் முன்னிலை கிடைக்கும் என ஆய்வு முடிவுகள் வந்தள்ள நிலையில் இது நம்பிக்கையை தந்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
 
மும்பையில் நேற்று அவர் அளித்த பேட்டியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் கூட கிடைக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.
 
கனவு காண்பதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் மோடி தூங்கும் போதும் கனவு காண்கிறார். விழித்திருக்கும் போதும் கனவு காண்கிறார்.
 
பாஜ.வினர் நாட்டின் பாதுகாப்பு குறித்தும், போலி தேசியவாதம் குறித்தும் அனல் பறக்க பேசி வருகிறார்கள். என்னமோ தாங்கள்தான் தேசத்தை காப்பாற்றுவது போலவும் தாங்கள்தான் தேசியவாதிகள் என்பது போலவும் பேசி வருகிறார்கள். இது தவறு.
 
1947ம் ஆண்டும் 1965ம் ஆண்டும் 1971ம் ஆண்டும் பாகிஸ்தானுடன் மூன்று போர்கள் நடந்தன. இந்த மூன்று போர்களிலும் நாட்டை காப்பாற்றியது யார்? திறமை மிக்க நமது ராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தான். 54 அங்குலம் நெஞ்சு உள்ளவர் என்று பீற்றிக்கொள்ளும் தனிநபர் அல்ல.
 
தான் சாபம் இட்டதாலேயே மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக பாஜ கட்சியின் போபால் வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
கடந்த தேர்தலில் 10 ஆண்டுகால ஆட்சியில் நாங்கள் செய்தது என்ன என்று சொல்லி வாக்கு கேட்டோம். ஆனால் நரேந்திர மோடி பெரிய வாக்குறுதிகளை கொடுத்தார். இதை நம்பி மக்கள் நரேந்திர மோடிக்கு வாக்களித்தனர். ஆனால் அவர் ஏமாற்றி விட்டார்.
 
நடந்து முடிந்த 3 கட்ட தேர்தலையும், கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது காங்கிரஸ் இம்முறை அதிக இடங்களில் பிடிக்கும். இது காங்கிரஸ் தேர்தலில் பலம் பெற்றுள்ளதன் அடையாளம் ஆகும். ஆனால் பாஜ.வுக்கு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 
கூட்டணி கட்சிகளையும் சேர்த்தால் காங்கிரஸ் கணிசமான எண்ணிக்கையில் பாஜ.வை விடவும் முன்னிலை வகிக்கிறது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.