பொது இடங்களில் கிருமிநாசினி சுரங்கங்களை அமைப்பதைத் தவிர்க்குமாறு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கிருமிநாசினி சுரங்கப்பாதை திருப்பூரில் அமைக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் பல மாவட்டங்களும் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டன.

இந்நிலையில், கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைப்பதன் மூலம் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்திட முடியாது என்றும் அதனால் உடல்நலன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பை தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

இனி எந்த இடத்திலும் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கவும் அதனை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதில் சோப்பு உள்ளிட்டவற்றால் கைகளை கழுவுவதாலும் முக கவசம்போட்டுக் கொள்வதாலும் வைரஸ் பரவலைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.