முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
1979 ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடர் (ஓய்வு) அதிகாரியான அலோக் வர்மா, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி சிபிஐ இயக்குநராக அலோக் வர்மா பதவியேற்றார். அவரின் பதவிக் காலத்தில் அவருக்கும் குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரியும், சிபிஐ உதவி இயக்குநராகவும் இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள். இதன் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி சிபிஐ இயக்குநர் பதிவியில் இருந்து அலோக் வர்மா விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் அவரை அதிகாரம், முக்கியத்துவம் இல்லாத தீயணைப்புத் துறை, உள்நாட்டு பாதுகாப்பு, ஊர்க்காவல் படை தலைவராக நியமித்தது ஒன்றிய மோடி அரசு.
எனினும் அந்தப் பொறுப்பை ஏற்க விரும்பாமல் தனக்கு 60 வயது நிறைவடைந்துவிட்டதால் தான் ஓய்வுபெற்றதாக கருத வேண்டும் என்று அலோக் வர்மா ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினாா்.
இந்நிலையில் சிபிஐ இயக்குநராக இருந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி அலோக் வர்மா மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய பணியாளா், பொதுமக்கள் குறை தீர்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இதனைத்தொடா்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்யும் மத்திய அரசு பணியாளார் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) அந்தப் பரிந்துரையை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அனுப்பி வைத்துள்ளது.
உள்துறை அமைச்சகம் அனுப்பிய பரிந்துரையில், “அலோக் வர்மா தனது பணிக்காலத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளார். ஆதலால், அவர் மீது தேவையான ஒழுங்கு நடவடிக்கையை எடுக்கலாம். அவரின் ஓய்வூதியம், ஒய்வூதியப் பலன்களை நிரந்திரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ நிறுத்தி வைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லி காவல் ஆணையராக இருக்கும் ராகேஷ் அஸ்தானாவுடன் மோதலில் ஈடுபட்டதற்காகவே முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒன்றிய மோடி அரசு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா குஜராத்தை சேர்ந்தவர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிஎஸ்எப் பிரிவின் டிஜிபியாகப் பொறுப்பேற்ற நிலையில், தற்போது டெல்லி காவல் ஆணையராக ஒன்றிய மோடி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி பிரகாஷ் சிங் வழக்கில், காவல் ஆணையர்களை நியமிக்கும்போது அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு முரணாக ராகேஷ் அஸ்தானா டெல்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.
6 ஆண்டுகளில் 680 துணை ராணுவப் படையினர் தற்கொலை: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்