அதிமுக – பாமக இடையே இன்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு வந்த பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸை, முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியும், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வமும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.
 
பிறகு இரு தரப்பினருக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை அடுத்து, கூட்டணி ஒப்பந்தத்தில் இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
 
இந்த கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
அதே போல, தமிழகத்தில் காலியாக உள்ள 21 பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும். அதற்கு பாமக தனது முழு ஆதரவைத் தரும் என்பது ஒப்பந்தத்தில் முடிவாகியுள்ளது.
 
அதாவது, தமிழகத்தில காலியாக உள்ள 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அதிமுகவே போட்டியிடும். இதில் 21 தொகுதிகளில் 8 தொகுதிகள் பாமக பலம் வாய்ந்த தொகுதிகளாக உள்ளன.
 
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றவே, பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகளை அதிமுக வாரி வழங்கியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
 
ஆரம்பத்தில் இருந்தே பாமக, திமுக மற்றும் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய நிலையில், திமுக அதனை மறுக்காத வேளையில் இன்று பாமக அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்துள்ளது.

 

இதே போல, கடந்த 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்த பாமகவுக்கு 6 தொகுதிகளை வழங்கினார் ஜெயலலிதா.
 
அப்போது அதிமுக கூட்டணியில் இணைந்த மதிமுகவுக்கு 4 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 3 தொகுதிகளும் வழங்கப்பட்டன. அதிமுக 23 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி மிக பெரிய வெற்றி பெற்றது.
 
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியே ஒட்டுமொத்த வெற்றியையும் தட்டிச் சென்றது. அப்போது தனது கூட்டணியில் இருந்த பாமக 1 தொகுதியையும், பாஜக 1 தொகுதியையும், அதிமுக 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. 2014ம் ஆண்டு தனித்துப் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.