மாநிலங்களவையில் மீண்டும் முத்தலாக் மசோதா முடங்கியதால் அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு 3 முறை ‘தலாக்’ (முத்தலாக்) கூறுகிற வழக்கம் இருந்தது.
 
இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3 முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்து விடும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்டவிரோதமானது என்று 2017-ல் தீர்ப்பு வழங்கியது. அத்துடன், இது தொடர்பாக நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறியது.
 
அதைத் தொடர்ந்து ‘முத்தலாக்’ சட்ட விரோதம் என அறிவிக்கும் சட்டம் கொண்டு வர மத்திய அரசு விரும்பியது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் 2017 டிசம்பர் மாதம் 27–ந் தேதி மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
 
ஆனால் மாநிலங்களவை தொடர்ந்து முடங்கியதால், அங்கு இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இந்த நிலையில் ‘முத்தலாக்’ நடைமுறையை தடை செய்து மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
 
இப்போது இது தொடர்பான முறையான சட்ட மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த மசோதா மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
‘முத்தலாக்’ தடையை மீறி ஒருவர் செயல்பட்டால், அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க ‘முத்தலாக்’ மசோதாவில் வகை செய்யப்பட்டது. அவசர சட்டத்தின் ஆயுள் 6 மாதம் தான்.
 
நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய 42 நாளில் மசோதா நிறைவேறி விட வேண்டும் என்ற நிலையில் தொடங்கியது. இல்லாத பட்சத்தில் அவசர சட்டம் காலாவதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டிசம்பர் 27-ம் தேதி 5 மணிநேர கடுமையான விவாதத்திற்கு பிறகு முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதும் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு மசோதா சென்றது.
 
ஆனால் மாநிலங்களவையில் பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடையாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியமானது. அதிமுக, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளுமே மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் மசோதா முடங்கியது.
 
ஏற்கனவே மாநிலங்களவையில் மசோதா முடங்கியது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் முத்தலாக் கிரிமினல் குற்றம் என்பதை உறுதிசெய்யும் வகையிலான அவசர சட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை சம்மதம் தெரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
 
சட்டமாக இயற்ற முடியாக நிலையில் பாஜக அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் அது அபத்தமாக இருக்கும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்