பொதிகை தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து தூர்தர்ஷன் சேனல்களிலும் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்பாக உள்ளதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

அகில இந்திய அளவில் அனைத்து மாநில மொழிகளிலும் தூர்தர்ஷன் சேவை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையின் கீழ் இயங்கும் பிரசார் பாரதி இந்த சேவைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரசார் பாரதி புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு நாளும் காலை 7.15 மணி முதல் 7.30 மணி வரை டெல்லி தூர்தர்ஷன் ஒளிபரப்பும் 15 நிமிட சமஸ்கிருதச் செய்தி அறிக்கையை அதே நேரத்திலோ, அல்லது அடுத்த அரை மணி நேரத்திலோ மாநில மொழி அலைவரிசைகளிலும் ஒளிபரப்ப வேண்டும்.

அதேபோல, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 6.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வாராந்திரச் செய்தித் தொகுப்பையும் மாநில மொழித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும்” என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சமமான தகுதியையும், ஏற்றத்தாழ்வற்ற வளர்ச்சியையும் அளித்து, பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளது இந்திய ஒன்றிய அரசு.

அதற்கு மாறாக, பாஜக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நாளிலிருந்தே இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை மட்டுமே மேற்கொண்டு, மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தி, ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நடவடிக்கைகளை அனைத்து மட்டத்திலும் மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவில் 15 ஆயிரம் பேர் அளவிற்கே பேசப்படும் ‘உலக வழக்கழிந்த’ சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை 8 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்களிடமும், அதுபோலவே பல கோடி அளவிலான இந்தியாவின் பிற மொழி பேசும் மக்களிடமும் திட்டமிட்டுத் திணிப்பது, அவரவர் தாய்மொழி மீது, மொழி சார்ந்த தேசிய இனத்தின் மீது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்” என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மோடி வருகைக்காக வாரணாசி குடிசை வாசிகள் விரட்டி அடிப்பு