ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை இளையராஜாவுக்கு இரண்டு சம்மன்கள் அனுப்பி நெருக்கடி கொடுத்த காரணமாகத்தான், அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு மோடியை புகழ்ந்து இளையராஜா முன்னுரை எழுதி உள்ளார் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடியை பற்றி தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வரும் புளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம், அண்மையில் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் புகழ்பாடும் புத்தகங்களை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டது இந்நிறுவனம்.
அதன் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் ராஜேஷ் ஜெயின் என்பவர், 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு சோசியல் மீடியா பிரச்சாரம் மேற்கொண்ட மிக முக்கியமான நபர்.
புளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் Mann Ki Baat: A Social Revolution on Radio, MODI@20: Dreams Meet Delivery, Exam Warriors, Mahatma’s New India, Ambedkar and Modi ஆகிய 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
இதில் அண்மையில் இந்நிறுவனம் வெளியிட்ட ‘அம்பேத்கரும் மோடியும்’ (Ambedkar and Modi) என்ற புத்தகத்தில் தான் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த முன்னுரையில் பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ள இளையராஜா, மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவராக குறிப்பிட்டிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்துக்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் இளையராஜாவுக்கு கண்டனங்கள் எழுந்தன. அதே சமயம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பாஜக தலைவர்கள் பலரும் இளையராஜாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை கடந்த மாதங்களில் இளையராஜாவுக்கு கொடுத்த நெருக்கடியே, மோடியை இளையராஜா புகழ்ந்து பேச காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நோட்டீஸ் பின்னணி:
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை தலைமை இயக்குனரின் சென்னை மண்டல அலுவலகம் சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்திலிருந்து மூத்த புலனாய்வு அதிகாரி, பிப்ரவரி 28 ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் எண் 38, முருகேசன் தெரு, தி நகர், சென்னை என்ற முகவரிக்கு இளையராஜாவின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சம்மன் அனுப்பியிருக்கிறார்.
அந்த சம்மன் கடிதத்தில், “நீங்கள் (இளையராஜா) உங்களுடைய சேவை வரியை கட்டாத காரணத்தால், சேவை வரி ஏய்ப்பு தடுப்புச் சட்டத்தின்படி எங்களது சென்னை மண்டல அலுவலகத்தில் நீங்கள் விசாரணைக்காக 2022 மார்ச் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும். உங்களிடம் இருக்கும் ஆதாரங்களையும் ஆவணங்களையும் நீங்கள் வரும்போது எடுத்து வர வேண்டும்.
மத்திய கலால் சட்டம் (Central Excise Act) 1944 பிரிவு 14, நிதி சட்டம் (Finance Act) 1994 பிரிவு 83, ஜிஎஸ்டி சட்டம் 2017 பிரிவுகள் 70, 174 ( 2) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நீங்கள் மார்ச் 10 ஆம் தேதி காலை 11 மணிக்கு உங்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்” என்று இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மன்படி கடந்த மார்ச் 10 ஆம் தேதி இளையராஜா ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் மண்டல அலுவலகத்தில் ஆஜரானாரா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் இதே ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21ஆம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதே காரணங்களை மீண்டும் குறிப்பிட்டு மார்ச் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜிஎஸ்டி புலனாய்வு துறை தலைமை இயக்குனர் சென்னை மண்டல அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று இளையராஜாவுக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
இந்த மார்ச் 28 ஆம் தேதிக்குப் பிறகுதான் ஏப்ரல் 14ஆம் தேதி பிரதமர் மோடியை பற்றி தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட்டு வரும் புளூகிராஃப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனத்தின், ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார்.
ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை இளையராஜாவுக்கு அனுப்பிய இரண்டு சம்மன்களுக்கும், இளையராஜா அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு எழுதிய முன்னுரைக்கும் தொடர்பு ஏதும் உண்டா என்று அறிவார்ந்த வாசகர்கள் முடிவு செய்யலாம்.