தமிழ் மக்கள் அனைவரும் தமிழில் கையெழுத்து போட வேண்டும் என நடிகர் ஆரி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழில் நெடுஞ்சாலை, நாகேஷ் திரையரங்கம், மாயா உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்தவர் நடிகர் ஆரி. சினிமா தாண்டி சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை மூலம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தமிழில் கையெழுத்து போடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில், “என் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில் பெருமைப்படுகிறேன். தமிழில் கையெழுத்து போடுவதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் பலரும் தமிழ் மொழியில் கையெழுத்துப் போடுவதில்லை. இது அதிர்ச்சியான உண்மை. நானும் இதற்கு ஒரு உதாரணம் தான்.
நடிப்பை விட்டு விட்டு உனக்கேன் இந்த வேண்டாத வேலை என பலரும் எனக்கு அறிவுரை கூறுகிறார்கள். இருப்பினும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதில் ஈடுபட்டுள்ளேன்.
அடுத்தாண்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரை இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடத்த உள்ளோம்” என்றார். இந்த நிகழ்சியில் வழக்கறிஞர் ராஜவேல், நடிகர்கள் சவுந்தரராஜன், பிளாக் பாண்டி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு தமிழில் கையெழுத்து போட்டனர்.
சமீபத்தில், தமிழில் கையெழுத்து உலக மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி அமெரிக்காவில் டல்லாஸ் நகரில் ஃபெட்னா விழாவில் நடைபெற்றது. அதனை நடிகர் ஆரி ஒருங்கிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஆரி, இதற்குமுன் விவசாய மற்றும் இயற்கை விதை விதைத்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.