கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் அம்மாவின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து மோகன்லால் தலைவரானார்.

அதனைத் தொடர்ந்து திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டார். இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைபைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்திலிருந்து விலகினர்.

நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ‘அம்மா’ நடிகர் சங்கம் மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், தான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன் என்று தெரிவித்திருந்தார். திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து ரேவதி கூறும்பொது போது, “நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா, இல்லையா.. என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று விளக்கம் கேட்டோம். மேலும் பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருந்தம் கொண்டு வரும்படி கோரினோம், ஆனால் பதில் இல்லை” என்றார்.

இந்நிலையில் கேரளத் திரைப்பட பெண்கள்கூட்டமைப்பைச் சேர்ந்தநடிகைகள், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில்,பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மலையாள சினிமாவில் இதுபோன்ற குழு இதுவரை அமைக்கப்படவில்லை. பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில் விசாரணை குழுவை அமைக்க மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஜெயசங்கரம் நம்பியார் அடங்கிய அமர்வு இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.