சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கை படமாக எடுப்பது வழக்கமாகியுள்ளது. இந்த வரிசையில் மறைந்த நடிகையும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் வாழ்க்கையும் படமாக உருவாக உள்ளது.

கிரீடம், மதராசபட்டிணம், தியா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் ஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விப்ரி மீடியா தயாரிக்கவுள்ள இந்த படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்க உள்ளனர். இதே நிறுவனம் தான் என்.டி.ஆர் வாழ்க்கையையும் படமாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை தொடர்புடையதாகவும், இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக முதல் கட்ட பேச்சு வார்த்தை வித்யா பாலனிடம் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேரக்டரில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.